யு.பி.எஸ் .ஆர் (UPSR) பொதுத் தேர்வு நீக்கம்: நல்லதா கெட்டதா? சாதகமா பாதகமா?

யு.பி.எஸ் .ஆர் (UPSR) பொதுத் தேர்வு நீக்கம்:  நல்லதா கெட்டதா? சாதகமா பாதகமா?

மாண்புமிகு கல்வியமைச்சரின் இவ்வறிவிப்பினால்  கல்விமான்கள் மகிழ்ச்சியோடு பெருமூச்சு விடுவது நமது கண்களுக்குத் தென்படுகிறது.  21 ஆம் நூற்றாண்டின் எதிர்ப்பார்ப்புகளையும் சவால்களையும் சமாளிக்கும் விதமாக நாட்டின் கல்விமுறையை உருமாற்றம் செய்ய ஆர்வம் கொண்டிருந்த கல்விமான்களும் கல்வியாளர்களும் இந்த அறிவிப்பை உற்சாகத்தோடு வரவேற்கின்றனர். 

கல்வி உருமாற்றம்  மூன்று நிலைகளில் நிகழவேண்டும்.

 1. பாடத்திட்டம்              2. கற்றல் கற்பித்தல்             3. தேர்வு

     

 #பாடத்திட்ட உருமாற்றம்.

2000 ஆம் ஆண்டு தொடங்கி பன்னாட்டு ஒப்பீட்டளவில் மலேசியாவின் தொடர் பின்னடைவு கல்வி உருமாற்றத்திற்கான தேவையை உருவாக்கி இருந்தது. அதை நிறைவு செய்யும் முகமாக 

2013- 2025 ஆம் ஆண்டிற்கான மலேசியக் கல்விப் பெருந்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தப் பெருந்திட்டத்தில் கல்வி உருமாற்றம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் தொடக்கப்பள்ளிகளுக்கான பாடத்திட்ட உருமாற்றம்.

1983-2010 வரைக்குமான பாடத்திட்டம் தொடக்கப் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த பாடத்திட்டம் என அழைக்கப்பட்டது (KBSR ). தொடர்பாடல், மனிதரும் சுற்றுச்சூழலும், தனிமனித தன்னாளுமை வளர்ச்சி என மூன்று கருப்பொருள்களைச் சுற்றி பாடத்திட்டம் அமைந்திருந்தது.

வாசிப்பு, எழுத்து, கணிதம்  எனும் அடிப்படை முத்திறன்களுக்கு முக்கியத்துவம் வழங்கியப் இப்பாடத்திட்டம்.  ஆக்க- பகுப்பாய்வுச் சிந்தனைகள் இப்பாடத் திட்டத்தில் சேர்கப்பட்டிருந்தன.

2011 தொடங்கி  தொடக்கப்பள்ளிகளுக்கான  செந்தரப்பாட்டுப் பாடத்திட்டம் ( KSSR) என அழைக்கப்பட்டது. இப்பாடத் திட்டம் 6 வகையான கருப்பொருள்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தது.

அ. தொடர்பாடல் ( communication)

ஆ. ஆன்மீகம், நன்னெறி, மனப்போக்கு( spirituality, attitudes, values )

இ. மனிதம் ( Humanism)

ஈ. புறவய செவ்விய  வளர்ச்சி( Physical and Esthetics Development,)

உ. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி( Science and Technology)

ஊ. தன்னாளுமை வளர்ச்சி ( personality development) 


இவை நான்கு திறன்களுக்கு முக்கியத்துவம் வழங்கும்

- வாசிப்பு, 

- எழுத்து, 

- கணிதம்,  

- பகுத்தறிவு( logical reasoning)


கடந்த 2017இல்,  தொடக்கல்விப் பாடத்திட்டம்    KSSR   ஒரு மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் ஜாவி ( khat jawi ) எழுத்துக்கள் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் ஒரு காத்திர நிலையை அடைந்தன. காட் வனப்பெழுத்து ஒரு esthetic  value உள்ள கலையாகவும் நாட்டின் பாரம்பரிய மதிப்பு உள்ள கலையாகவும் எல்லோருக்கும் கற்பிக்கப்பட வேண்டுமெனும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

 உலகத்தரத்திற்கு ஈடான,  21 ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான அறிவுத்திறன்களைக் கொண்டிருக்கும் பாடத் திட்டம்  இன்றையச் சூழலில் இன்றியமையாதது. தொடர்ச்சியாக பாடத்திட்டம் மாற்றத்திற்கு உள்ளாகும்


 #கற்றல் கற்பித்தல் உத்தி

அந்த பாடத்திட்டதைச் சிறந்த முறையில் மாணவரிடம்  கொண்டுபோய்ச் சேர்க்கும் கற்றல் கற்பித்தல் உத்திகளும் உருமாற்றம் அடைந்துள்ளன.  மாணவரை ஆர்வத்தின் விளிம்பில் எப்போதும் வைத்திருக்கும் ஓர் உற்சாக கற்றல் முறையே இன்றையத் தேவை. அளவான வீட்டுப்பாடமும் அன்பான அரவணைப்பும் மாணவரின் குரலுக்கு மதிப்பும்,  மாணவரின் தன்னாளுமையை வெளிப்படுத்த வாய்பையும் கற்றல் கற்பித்த்ல் வழங்க வேண்டும். அதற்கு வளமான திட்டமிடல் வேண்டும்.

வெண்கட்டியை விட்டு அடித்து கொட்டாவி விடும் மாணவரை எழுப்பும் ஆசிரியர்கள் இனி தேவை இல்லை. போதனையின்போது  ஏன் மாணவர்கள் கொட்டாவி விடுகின்றனர், எப்படி கற்றல் கற்பித்தலைக் கலகலப்பாகக் கற்றுத்தருவது எனச் சிந்தித்து கற்றல் கற்பித்தலை இனிமையாக்கும் ஆசிரியர்களே இனித்தேவை.


#தேர்வு உருமாற்றம்

என்னதான் சிறந்த கல்வி- பாடத் திட்டதைக் கொண்டிருந்தாலும், தேர்வுக்கு முக்கியத்துவம் வழங்கும் கல்விமுறையினால், தேர்வுக்கு படிக்கும் நோக்கமே மேலோங்கி நிற்கும். இதனால் மாணவரின் உள்ளாற்றல் ( talent) , ஆக்கத்திறன்( creativity) ,  சிந்தனைத்திறன்( thinking skills) வளராமல் வீணடிக்கப்படுகிறது  என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

இரவுப்பகலாக விழுந்து விழுந்து படித்தாலும் படித்தது  கேள்வியாக வரவில்லை என்றால் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தேர்வில் தோல்வி உறுதி.

இதற்கு ஒர் நல்ல எடுத்துக் காட்டு நடிகர் விஜய் நடித்த ஒரு திரைப்படம். மூன்று நண்பர்கள். ஒருவர் கலகலப்பாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆற்றலோடு இருப்பார். இன்னொருவர் புத்தகப் புழு. ஞாபக சக்தி மிக்கவர்.  புத்தகத்தில் உள்ளதை வரிக்கு வரிக்கு எழுதி தேர்வில் வெற்றிக்கொடி நாட்டுவார். ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைகிடைத்து  பொருளாதார வெற்றியைப் பெறுகின்றார் புத்தகப்புழுவாக இருக்கும் நண்பர்.  அறிவில் சிறந்த கண்டுபிடிப்பாளர் பொதுமக்களால் கண்டுகொள்ப்படாத நிலைமை. 21 ஆம் நூற்றாண்டுக் கல்வி, தேர்வில் மட்டும் திறமையைக் காட்டுதல் போதாது என்கிறது. படைப்பாற்றல் மிக்க ஆக்கச் சிந்தனை உடையோரை  கல்வி உருவாக்க வேண்டும் என்கிறது.

அதன் எதிர்வினைதான் தேவுகளை நீக்குதல்.  தேர்வுகள் இரத்து செய்யப்பட்டால் எந்த மோசமான பின் விளைவுகளும் இருக்காது என்கின்றனர் கல்விமான்களும் ஆய்வாளர்களும். 

மாறாக பொதுமக்கள், குறிப்பாக பெற்றொர்கள்  கலக்கம் அடைந்திருக்கும் செய்தி நம் காதுக்கு வருகிறது.

"தேர்வு இருக்கும்போதே படிக்க மாட்டார்கள். தேர்வு இல்லையென்றால் படிக்க விருப்பப்படவே மாட்டார்கள்"  எனும் விமர்சனங்கள் காதில் கேட்கிறது.


தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் என்னிடம் தெரிவித்த கருத்து:

"தமிழ்ப்பள்ளியில் யு.பி.எசு.ஆர் தேர்வு மூலம் மாணவர்கள் பெற்ற வெற்றி பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் இரவுப்பகல் பாராமல் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி நிறைய மாணவர்கள் எல்லாப் படங்களிலும் 'ஏ' பெறுவதற்கு வழிவகுத்தோம்.  சிறப்புத் தேர்ச்சிப்  பெற்றப் பள்ளிகளையே பெற்றோர்கள் விரும்புகின்றனர்" 


ஒரு பெற்றோர் கூறியக் கருத்து:

"என் பிள்ளை கெட்டிக்காரன். பொதுத்தேர்வு மட்டும்தான் என் மகனுக்கு உரிய நடுநிலையான  நியாயத்தை வழங்க முடியும். இல்லை என்றால் ஆசிரியரின் விருப்பத்தில் அல்லது பாரபட்சத்தில் கொடுக்கப்படும் புள்ளிகள் என்மகனுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தும்.".


அதே நேரத்தில் படிவம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்கள் குறிப்பாக  உண்டுஉறைவிடப் பள்ளிகளான  ( Boarding School) மாரா  அறிவியல் கல்லூரிகள், அறிவியல் பள்ளிகள் போன்ற கல்விக் கூடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவர்கள்  யு.பி.எசு.ஆர்  தேர்வில் அவர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தேர்வு இரத்து செய்யப்படுகிறது எனும் அறிவிப்பு இதுகாறும் வழக்கத்தில் இருந்து வந்துள்ள நடைமுறையில்  சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

யு.பி. எசு.ஆர் தேர்வு பெற்றோரின் நம்பிக்கையையும் ஆசிரியர்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆனால் தேர்வைப் பற்றி பெற்றோர்கள் / பொதுமக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் உண்மையான  நிலைமையை பிரதிபலிக்க வில்லை.

பொதுதேர்வு நீக்கப் பட்டிருந்தாலும் மாற்று முறைகளில் மாணவரின் அடைவு நிலையை அளக்க முடியும். வகுப்பறை மதிப்பீட்டுத் தேர்வு ( Classroom Based Assessment) முறை என்ற ஒன்று பிரபலமாகி வருகிறது. இந்த மாற்று மதிப்பீட்டு முறையை மேலும் செம்மை செய்து , எளிமைப்படுத்துவதன் வாயிலாக பொதுத்தேர்வு முறை ஏற்படுத்தும் தீவிளைவை தடுக்கலாம்.


#யு.பி.எஸ் ஆர் தேர்வு முறையான திட்டமிடல் ஆய்வு இல்லாமல் இரத்து செய்யப்பட்டதா?

கடந்த சில ஆண்டுகளாகவே தேர்வுகளுக்கான முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என்பது  உலகத்தில் உள்ள எல்லா கல்விமான்களின்,  கல்வியாளர்களின் குரலாக இருந்து வந்துள்ளது. ஒரு பாடத்தில் ஒரு மணிநேர இரண்டு மணிநேர எழுத்துத் தேர்வுக்கு பதில் மாற்று வழிகளில் ( alternative assessment)  மாணவரின் உண்மையான ஆற்றலை மதிப்பீடு செய்ய வேண்டும் எனும் கருத்து பரவலாக இருந்து வந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் கூட இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவைப் பொருத்தவரை ஒன்றாம் இரண்டாம் வகுப்புகளுக்குக் கூட  பள்ளியளவில் தேர்வுகள் வேண்டாம் எனும் நிலைப்பாடு கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்டது.

ஆனந்தமாகப் பள்ளிக்கு வருகின்ற ஒன்றாம் வகுப்பு  மாணவர்களையும் தேர்வு அச்சத்திற்கு உள்ளாக்கி படிப்பின்மேல் வெறுப்பை உருவாக்கிவிட வழிவகுத்திட வேண்டாம்  எனும் காரணத்தால் தேர்வு அவர்களுக்குத் தவிர்க்கப்பட்டது. 

படிப்பு என்பது தேர்வுக்காக அல்ல. அறிவுக்காகப் படிக்கின்றோம் எனும் எண்ணத்தை மாணவரிடம் விதைக்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாகப் பொதுத் தேர்வுகள் மேல் ஏற்பட்டிருக்கும் அதீதமான 

எதிர்ப்பார்ப்பை குறைக்க வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையே போச்சு எனும் மனப்போக்கிலிருந்து மாணவர்களையும் பெற்றோர்களையும் வெளிக்கொணர வேண்டும்.


#தேர்வில் தோல்வியடையும் மாணவரின்  மனநிலை

ஆரம்ப பள்ளித் தேர்வுகளில் தோல்வி அடையும்  அந்த பிஞ்சு வயது மாணவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தேர்வின் அடிப்படையில் ஒரு குழந்தையை அறிவாளி/ முட்டாள் என்று வகைப்படுத்தும்  செயல் சரியானது அல்ல. 

அறிவாற்றல் என்பது வளரவேண்டிய ஒன்று. ஒரே தேர்வில் ஒருவரின் அறிவாற்றலை மதிப்பிட்டு விடக்கூடாது  என்பது கல்விமான்களின் கருத்து. 

ஆறு ஆண்டுகள் தொடக்கப்பள்ளியில் படித்த மாணவர்  ஒருவருக்கு வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். எழுத தெரிய வேண்டும். கணக்கு செய்ய தெரிய வேண்டும். சிந்திக்க தெரிய வேண்டும். ஏட்டுக்கல்வியையும் தாண்டி பல்வேறு திறனகளில் மாணவர்கள் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.


 நல்லொழுக்கங்களைக் கடைபிடிக்கும் எணணமும் உறுதியும்  வேண்டும். 

ஒரு மாணவன் ஒழுக்கச்சீலனாகவும்,  உடல் வலிமை உள்ளவனாகவும் , சுறுசுறுப்பானவனாகவும், விளையாட்டுப்போட்டியில் கெட்டிக்காரனாகவும், நல்ல பேச்சாற்றல் உள்ளவனாகவும், பாடக்கூடியவனாகவும், கைவினைப் பொருட்கள் செய்யும் திறன் உள்ளவனாகவும் இருக்கையில் தேர்வில் குறைந்த புள்ளிகளைப் பெற்றான் என்ற காரணத்திற்காக அவனை முட்டாள் அல்லது மூடன் என ஒதுக்குவது சரியான செயலா?

இளம் வயதில் மாணவனுக்கு மகிழ்ச்சியை ஊட்டி நல்ல பண்பையும் விடா முயற்சியையும் அன்றோ கல்வி விதைக்க வேண்டும்! மாறாக அந்த இளம்வயதில் அவனுக்கு முட்டாள் பட்டதை வழங்கலாமா தேர்வு முடிவுகள்?

உளவியல் ரீதியாக இது எதிர்மறை தாக்கத்தை  மாணவர்களிடையே  ஏற்படுத்துகிறது என்பது கல்வியாளர்களின் கருத்து. கல்வியாளர்களின் இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வது நம்முடையக் கடமை.

ஆரம்பக்கல்வியின் நோக்கத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மலேசியக் கல்வியமைச்சு தொடக்க கல்வியின் நோக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது.


# மொழியில் ஆற்றல் பெற்றிருத்தல்

# கணிதத்தில் திறனும் அன்றாட சிக்கலைக் களையக் கணிதத்திறனை பயன்படுத்த்த தெரிந்திருத்தல்

# கற்கும் திறன், சிந்திக்கும் திறன்,  தலைமைப்பண்புத் திறன், அறிவியல் கருவித் திறன், சுத்தம் தூய்மை பேணும் திறன், மனித் சமூகத்தின் மீதும் சுற்றுச் சூழலின் மீதும் புரிதலையும் , அவர்தம் தேவை தேவையை அறிந்து சமூக நற்பணியில் ஈடுபடுவதும் , கலை, கைவினை, பண்பாடு மீது கவனம் செலுத்தும் திறன், நாட்டுப்பற்று, ஆக்கத்திறன்.கொண்டிருக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் பரிசோதிக்க  யு.பி.எஸ் ஆர் தேர்வால் மட்டும்தான் முடியுமா?

#மாற்று மதிப்பீடுகள் மூலம் பரிசோதிக்க முடியாதா என்ன?

ஒரு ஒற்றைத்தேர்வு மாணவரின் உண்மையான அறிவாற்றலைக் கண்டு பிடித்துவிடுமா? 

யு.பி.எஸ்.ஆர் தேர்வு மட்டுமே ஒரே வழி என்பதை 21 ஆம் நூற்றாண்டின் கல்வி முறை ஏற்கவில்லை. அப்படிப்பட்டத் தேர்வு மாணவரின் ஞாபக சக்தியை  மட்டுமே அடிப்படையாகப் பரிசோதிக்கிறதே தவிர , உண்மையான அறிவாற்றலை அல்ல என்பது கல்வியாளர்தம் கருத்து.

2013-2025ஆம் ஆண்டிற்கான மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில்( National Education Blueprint)  வெறும் ஞாபக சக்தியினை மட்டுமே பரிசோதிக்கின்ற அல்லது மதிப்பிடுகின்ற  தேர்வு முறை குறைக்கப்பட்டு சிந்திக்கத்தூண்டி பகுத்தறிவு, பகுப்பாய்வு, ஆக்க அறிவை வெளிப்படுத்தும் தேர்வு முறையாக உருமாற வேண்டும்  எனும் கருத்து மேலோங்கியது.

நம்நாடு பன்னாட்டு கல்வி மதிப்பீட்டில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த வேளையில்(PISA; TIMSS)

, கல்வியில், தேர்வில்  ஒரு உருமாற்றம் தேவைப்பட்டது என்கிறது அரசாங்கம். பழைய கல்வி முறையில் உள்ள தேர்வு முறையை அகற்றிவிட்டு  புதிய தேர்வுமுறையை கொண்டுவர கல்வியமைச்சு திட்டம் கொண்டிருந்ததும்

அதன் நீட்சியாகத்தான் 2013 இல் , மலேசிய கல்விப் பெருந்திட்டம் அறிமுகமானது.

மாணவரின் ஞாபக சக்தி மட்டும் அல்லாது மாணவரின் அறிவாற்றலும், தலைமைப் பண்பும் ஒழுக்கமும், இயற்கையை போற்றும் திறனும் , அறிவாக்கமும் புத்தாக்கமும் கூடவே வெளிப்படும் அளவுக்கு மதிப்பீடு அமைய வேண்டும் எனக் குறிக்கோளைக் கொண்டிருகின்றது தேர்வு உருமாற்றம்.

அதாவது மதிப்பீடுகள் கற்றலை ஊக்குவிக்கவும் வேண்டும் அதே நேரத்தில் மாணவரின் உண்மையான ஆற்றலை மதிப்பீடும் செய்ய வேண்டும். அதற்கு பொதுத்தேர்வு அவ்வளவாக உதவாது. காரணம் பொதுத்தேர்வு கற்றலை ஊக்குவிக்க உருவாக்கப் படவில்லை. மாறாக மாணவரைத் திறமையின் அடிப்படையில் இனம் பிரிக்க மட்டும் உதுவுகின்றன. 


-குமரன் வேலு- 

மூலம்: (https://www.facebook.com/kumaravalu.ramasamy)-


No comments:

Post a Comment